உள்ளூர் செய்திகள்

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள பட்டாசு கடை உரிமையாளரிடம் தாசில்தார் செந்தில் லைசன்ஸ் முறையாக உள்ளதா என ஆய்வு செய்த காட்சி.

வேலூரில் உள்ள பட்டாசு கடைகளில் தாசில்தார் திடீர் ஆய்வு

Published On 2023-10-22 12:51 IST   |   Update On 2023-10-22 12:51:00 IST
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை செய்தனர்
  • உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுரை

வேலூர்:

நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பட்டாசு விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்த தாசில்தார்களுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையா ளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், டிஆர்ஓ மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி பட்டாசு விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள பட்டாசு கடையில், தாசில்தார் செந்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, கடை உரிமையாளர் ஜனார்த்தனனிடம், கடைக்கான லைசென்ஸ் உள்ளதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து, கடையில் அவசர கால வழி திறந்த நிலையில் உள்ளதா?, கடையில் அனுமதிக்கப்பட்ட அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா?, தீத்தடுப்பு கருவிகள் காலாவதி ஆகாமல் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

மேலும், சீனா பட்டாசுகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், விற்பனை செய்யக்கூடாது. அரசின் வழிகாட்டுதல் முறையாக பின்பற்றி, பட்டாசு விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பட்டாசு கடை உரிமையாளர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தாசில்தார் செந்தில் அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News