உள்ளூர் செய்திகள்

வியாபாரியிடம் நூதன முறையில் பணம் திருட்டு

Published On 2023-10-10 13:46 IST   |   Update On 2023-10-10 13:46:00 IST
  • போலீஸ் சீருடையில் காரை வழி மறித்து துணிகரம்
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

வேலூர்:

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பர்வேஷ் அகமது (வயது 53). இவர், சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, பெங்களூரில் விற்பனை செய்து வந்தார்.

கடந்த மாதம் பொருட்களை வாங்க இஸ்மாயிலை தொடர்பு கொண்ட போது, தன்னிடம் இப்போது பொருட்கள் இருப்பு இல்லை.

காட்பாடியைச் சேர்ந்த சங்கர் என்பவரை தொடர்பு கொள்ளும்படி கூறி அவரது செல்போன் எண்ணையும் கொடுத்தார்.

அதன்படி, சங்கரை தொடர்புகொண்டதில், காட்பாடியில் தன்னை சந்திக்கும்படி கூறினார். இதையடுத்து, பர்வேஷ் அகமது தனது காரில் நண்பர் மொஹாஜித் கான் உட்பட 3 பேருடன் கடந்த 7-ந் தேதி வந்து பெங்களூரில் இருந்து வேலுார் வந்து சங்கரை சந்தித்தார்.

அப்போது, "திருவலத்தில் உள்ள குடோனில் பொருட்கள் இருக்கின்றன, அங்கு செல்லலாம் என சங்கர் கூறினார். மேலும், தனது காரிலேயே அழைத்துச்சென்று மீண்டும் காட்பாடியில் விட்டுவிடுவதாக கூறியதாக தெரிகிறது.

இதை நம்பிய பர்வேஷ், தனது நண்பர் மொஹாஜித்கானுடன் சங்கர் காரில் ஏறினார். பின்னர், காரில் வைத்து ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை சங்கரிடம் கொடுத்தார்.

தொடர்ந்து, அம்முண்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் உட்பட 4 பேர் திடீரென காரை வழிமறித்தனர்.

இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர், மேலும் இது தொடர்பாக சங்கரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்றும், நீங்கள் இருவரும் காரை விட்டு இறங்குங்கள் என்றும் கூறியுள்ளனர்.

அப்போது, பதட்டத்தில் இருந்த பர்வேஷ் அகமது, மொஹாஜித்கான் ஆகியோர் வேகமாக காரை விட்டு இறங்கி, சாலையில் நின்றனர்.

இதையடுத்து, காரில் ஏறி விசாரணை நடத்துவதுபோல் நடித்த அந்த கும்பல் சிறிது நேரத்தில் சங்கருடன் காரில் தப்பியது.

இதுகுறித்து காட்பாடி போலீசில் பர்வேஷ் அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News