வி.ஐ.டி.யில் நடந்த பொங்கல் விழாவில் வேந்தர் விசுவநாதன் பொங்கல் வைத்து கொண்டாடிய காட்சி.
தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
- வேந்தர் விசுவநாதன் பேச்சு
- வி.ஐ.டி.யில் பொங்கல் விழா நடந்தது
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியம் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் விழாவை யொட்டி நையாண்டி மேளம், கரகாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையடுத்து விஐடி வேளாண் துறை சார்பில் நிலத்தடி நீர் மேலாண்மை காய்கறி சாகுபடி நிலக்கடலை சாகுபடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் சார்பில் விவசாயிகளுக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் கையேடுகளை வழங்கினார்.
மேலும் பண்ணை பணியாளர்களுக்கு பண முடிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்
இதையடுத்து வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:-
3000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய முன்னோர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பூங்குன்றனார் எழுதிய வரிகளுக்கேற்ப தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளனர்.
உலக மக்களோடு தமிழர்களுக்கு நல்ல உறவு உள்ளது. உலகத்தில் 7100 மொழிகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் சீன மொழியும் ஐரோப்பியாவில் கிரேக்க மொழி உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே தற்போது உள்ளன.
ஆனால் 2,3 ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் தமிழ் மொழி தற்போது இளமையோடு உள்ளது. அந்த மொழிக்கு சொந்தக்காரர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
தமிழர்கள் வல்லவர்களாகவும் நல்லவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லவர்களாக இருப்பதற்கு திருக்குறள் ஒரு ஆதாரம். வல்லவர்களாக இருப்பதற்கு கடுமையான உழைப்பு உதாரணம். நல்ல அரசு இருந்தால் வல்லவர்களாக வர முடியும்.
தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்மாதிரி மாநிலமாக திகழ வேண்டும்.
ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இந்த விழாவில் தமிழர்கள் மட்டும் இன்றி வெளி மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மேளம் தாளம் முழங்க விஐடி வேந்தர் விசுவநாதன் துணைவேந்தர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.
அதை தொடர்ந்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும் சேலை அணிந்தும் தங்கள் மாநில பாரம்பரிய உடைகள் அணிந்து வந்து இருந்தனர். நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்ப மாணவ, மாணவிகள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.