உள்ளூர் செய்திகள்

இழப்பீடு வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட பஸ்.

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2022-11-25 09:41 GMT   |   Update On 2022-11-25 09:41 GMT
  • பஸ் மரத்தில் மோதி விவசாயி பலியான வழக்கில் நடவடிக்கை
  • குடியாத்தம் பஸ் நிலையத்தில் பரபரப்பு

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஊராட்சி ஜங்காலபள்ளி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 52) விவசாயி.

கடந்த 2015-ஆம் ஆண்டு மணி அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமம் அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான மணியின் மகன்கள் அசோக்குமார், வேலு, மகள்கள் சத்யா, பவித்திரா ஆகிய 4 பேரும் குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரணை செய்த குடியாத்தம் சார்பு நீதிபதி 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மணியின் வாரிசுதாரர்களுக்கு 11 லட்சத்து 82ஆயிரத்து 342 ரூபாய் இழப்பீடாக வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

அரசு போக்குவரத்து நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து சார்பு நீதிபதி ஜி.பிரபாகரன் இழப்பீட்டு தொகையை வசூலிக்கும் பொருட்டு குடியாத்தம் அரசு டவுன் பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

நேற்று காலையில் சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளையாளர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.தேவராஜ், பி.ஆனந்தராஜ், மணியின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் டவுன் பஸ்சை பயணிகளுடன் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே நிறுத்தி ஜப்தி செய்தனர்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழக்கறிஞர் மூலம் சார்பு நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர் விரைவில் இழப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட சார்பு நீதிபதி ஜி. பிரபாகரன் வரும் 8-ந் தேதிக்குள் மணியின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு டவுன் பஸ்சை விடுவித்தார்.

குடியாத்தத்தில் பயணிகளுடன் டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News