வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
- பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியது
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் தூத்துக்குடியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோ மற்றும் வீட்டிலிருந்த பல்வேறு இடங்களில் நகை பணம் ஏதாவது உள்ளதா என்று தேடி பார்த்துள்ளனர். வீட்டில் லாக்கர் ஒன்று உள்ளது. அதனை உடைக்க முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றதாக கூறப்படுகிறது.
இன்று காலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து காட்பாடியில் உள்ள ஜேக்கப் பின் உறவினர்களுக்கு தெரிவித்தனர். அவர்களது உறவினர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் லாக்கரில் இருந்த நகை பணம் மற்றும் வீட்டின் மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த நகை கொள்ளையர்கள் கண்ணுக்கு படாததால் தப்பியுள்ளது.
இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க அந்தப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜேக்கப் வீட்டில் லாக்கர் உடைக்க முடியாததால் பல லட்சம் மதிப்புள்ள நகை தப்பியுள்ளது. வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென போலீசார் தெரிவித்தனர்.