உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்-காவிரியில் மட்டும் 27 ஆயிரம் கனஅடி செல்கிறது

Published On 2022-08-18 09:54 GMT   |   Update On 2022-08-18 09:54 GMT
  • வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது.
  • காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ள நீர் குறைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது

திருச்சி :

கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு ஆர்ப்பரித்து வந்ததையடுத்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்த உபரிநீர் முழுவதுமாக திறந்து விடப்பட்டது.

இதனால் காவிரியில் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டது. இடையில் பவானிசாகர், அமராவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணை வந்து அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வரை வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரையோரம் வசித்த மக்கள் மேடான பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். லால்குடி, உத்தமர் சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழைப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. உத்தமர்சீலி பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் மூன்று நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இந்த நிலையில் தற்போது நீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் முக்கொம்பு அணைக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அதில் காவிரியில் 26 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 49 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. அது நேற்றைய தினம் 51 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இதையடுத்து காவிரியில் 26 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 25 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இன்றைய தினம் நீர்வரத்து மேலும் சரிந்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு வந்த 27 ஆயிரம் கனஅடி நீரில் 600 கனஅடி நீர் அய்யன் பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால்களில் திறந்த விடப்பட்டது. மீதமுள்ள தண்ணீர் முழுமையாக காவிரி டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆர்ப்பரித்து ஓடிய வெள்ள நீர் குறைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News