உள்ளூர் செய்திகள்

கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்.

ராதாபுரம் அருகே பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி

Published On 2023-01-18 09:17 GMT   |   Update On 2023-01-18 09:17 GMT
  • ராதாபுரம் தாலுகா தனக்கார்குளம் பஞ்சாயத்து கோலியான் குளத்தில் பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி நடந்தது.
  • இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சியில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

பணகுடி:

ராதாபுரம் தாலுகா தனக்கார்குளம் பஞ்சாயத்து கோலியான் குளத்தில் பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி நடந்தது. இதில் இயற்கை விவசாய அமைப்பினர், பசுமை இயக்கம், ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம், ஜெய் பீம் பொதுநல இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இணைந்து கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியில் இயற்கை சார்ந்த பண்டைய காலத்தில் மூதாதையர்கள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள், தானிய வகைகள் இடம் பெற்றிருந்தன. அரிசி ரகங்களில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, குட வாழை, காட்டு யானம், தூய மல்லி, சொர்ணம் சூரி, குதிரைவாலி, சாமை போன்ற அரிசி ரகங்களை கண்காட்சியில் பங்கு பெற்ற பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

குறிப்பாக தானிய வகைகள், நாட்டு மருந்துகள், பழங்காலத்தில் வீடுகளில் பயன்படுத்திய உபயோகப் பொருட்கள், தேன் கலந்த பருப்பு வகைகள், செவ்வாழை பழ அல்வா போன்றவை கண்காட்சியில் வெகுவாக கவர்ந்தது. சிரட்டை, ஓலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் வியப்படைய செய்தன. இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சியில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இயற்கை வெல்லம், அவல் வகைகள், மரச்செக்கு தேங்காய் எண்ணையில் தயாரிக்க ப்பட்ட மகா தச கவ்யம் சோப்பு சோப்பு என இடம் பெற்றிருந்த பொருட்களை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றனர்.

முக்கிய அங்கமாக பல வகையான மரக்கன்றுகள் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது. மண் பாண்டங்கள், தானியங் களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்ப னையை அலங்க ரித்தது. மூலிகைகளால் தயாரான பல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முக்கியத்துவமாக இருந்தது. பெண்கள் மத்தியில் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுடன் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், ஓலைப் பொருட்கள் என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஏராளமான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News