உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

செம்பட்டி இரும்பு வியாபாரி படுகொலை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

Published On 2022-10-31 09:55 IST   |   Update On 2022-10-31 09:55:00 IST
  • மர்ம நபர்கள் முதியவரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
  • தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தண்ணி வண்டி (என்ற) சின்னத்துரை (வயது60). இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் (36) என்ற மகனும், நாகஜோதி (34) என்ற மகளும் உள்ளனர். கனகராஜ் திருப்பூரில் உள்ளார். நாகஜோதி திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார்.

பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும் சின்னத்துரை தெற்கு மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தெற்கு மேட்டுப்பட்டியில் 2 பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இரவு சுமார் 7 மணி அளவில் சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடிச் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. உத்தரவின் பேரில்தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் இருப்பதால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News