நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- போக்குவரத்து நெரிசல்
- கோடைகாலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
- மவுண்ட் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குன்னூர்:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இயற்கை காட்சிகளையும், குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடைகாலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோடைகாலம் தொடங்கியதையொட்டி கடந்த சில நாட்களாகவே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது தமிழ்புத்தாண்டு, வார விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர்.
இதனால் நீலகிரிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை, ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வாகனங்கள் அதிகளவில் வந்தன.
இதனால் குன்னூர்-ஊட்டி சாலையில் உள்ள காட்டேரி, லெவல் கிராஸ், மவுண்ட் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.