உள்ளூர் செய்திகள்

ஜப்தி செய்த அரசு பஸ்.

நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2023-03-24 09:36 GMT   |   Update On 2023-03-24 09:36 GMT
  • செய்யாறில் விபத்தில் பெண் பலி
  • பஸ் கோர்ட்டில் ஒப்படைப்பு

செய்யாறு:

செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி, வனஜா, கூலித் தொழிலாளி இவர் கடந்த 11.4.2008 அன்று வேலைக்குச் சென்று விட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுக் கொண்டு இருந்தார்.

ஞான முருகன்பூண்டி கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த வனஜா செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், விபத்தில் இறந்த வனஜாவின் கணவர் முருகன் மற்றும் மகன் ராஜசேகர், மகள்கள் விஜயசாந்தி சுமதி ஆகியோர் நஷ்டஈடு வழங்கக்கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி மனுதாரர்க ளுக்கு விபத்துக்கு நஷ்டஈடாக ரூ.13 லட்சத்து 14 ஆயிரம் வழங்க வேண்டும் என்று 25.3.19 அன்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மனு தாரர்கள் தரப்பில் சார்பு நீதி மன்றத்தில் நஷ்டஈடுத் தொகையை வழங்க நிறை வேற்று மனுவைத் தாக்கல் செய்தனர்.

அதன்பேரில் அசலும் வட்டியும் சேர்த்து ரூ. 27 லட்சத்து 34 ஆயிரத்து 335-ஐ. மனுதாரர் குடும்பத்திற்கு அரசுபோக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சார்பு நீதிபதி குமாரவர்மன் உத்தரவிட்டார்.

ஆனால் போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடுத் தொகை வழங்காததால் நேற்று மதியம் செய்யாறு பஸ் நிலையத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து சேலம் செல்லஇருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News