உள்ளூர் செய்திகள்

கருப்பராயன் கோவில் நிலத்தை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Published On 2022-12-18 07:02 GMT   |   Update On 2022-12-18 07:02 GMT
  • நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது.
  • கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர்.

பல்லடம் :

பல்லடம் அருகே கருப்பராயன் கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இதன் அருகில் கோவிலுக்கு சொந்தமாக 8.99 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ஊர் கட்டுப்பாடு குத்தகை அடிப்படையில் கிராம மக்களில் சிலர் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கருப்பராயன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. அதன்பிறகும் விவசாயம் செய்து கோவிலுக்கு குத்தகை செலுத்தி வந்தோம்.

இந்த நிலையில் கடந்த வருடத்தில் கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் கோவில் நிலத்தை சுற்றி இருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகளும் தோண்டப்பட்டது.அதன்பின்னர் கடந்த ஒரு வருடமாக யாரும் இங்கு எட்டிப் பார்ப்பதில்லை. இந்த நிலையில் கம்பி வேலிகள் பழுதடைந்து விழுந்ததால், அந்த கோவில் நிலத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. கோவில் நிலம் குடிமகன்களின் பாராக மாறிவிட்டது. மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மது பாட்டில்கள் கிடக்கின்றன. இதனைப் பார்த்து எங்களுக்கு வேதனையாக உள்ளது. தற்பொழுது இந்த கோவில் நிலம் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, அல்லது காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டும் எந்தத் தகவலும் இல்லாததால், தகவல் உரிமைச் சட்டத்தில் கூட கேட்டுள்ளோம். ஆனால் அதிலும் முறையான தகவல்கள் இல்லை. கண்ணெதிரே கோவில் நிலம் சீரழிவதை கண்டு வேதனையாக உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News