உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

சிலம்ப போட்டியில் திருப்பூர் மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

Published On 2022-06-06 06:39 GMT   |   Update On 2022-06-06 06:39 GMT
  • ஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.
  • திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர்:

தேசிய அளவிலான ஹீரோ கப் சிலம்பப் போட்டிகள் கோவாவில் ஜூன் 1 மற்றும் 2-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகம் சார்பில் 27 மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்க தேர்வாகினர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள். விஜயமங்கலத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தேசிய போட்டிக்கு 27 மாணவ மாணவிகளும் தேர்வாகி இருந்தனர்.

8வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர், 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அவிநாசியைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகளும் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ரெயில் மூலம் திருப்பூர் வந்தனர்.

அவர்களுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் தொடர் பயிற்சி அளித்த சிலம்பாட்ட ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன் மற்றும் தேவ அரசு என்ற 3 பயிற்சியாளர்களுக்கும் சால்வை அணிவித்து கவுரவித்தனர். 15 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சிலம்பாட்ட போட்டியில் 27 தங்கப்பதக்கங்களை தமிழக மாணவர்கள் பெற்றது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Tags:    

Similar News