உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடம் அருகே வேளாண் தொழில் குறித்த கருத்தரங்கம்

Published On 2022-12-24 10:34 IST   |   Update On 2022-12-24 10:34:00 IST
  • வேளாண்துறையில் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசினர்.
  • நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் அருகே பல்லவராயன் பாளையத்தில், வேளாண்மை உழவர் நலத் துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் 'வேளாண்மை அதிக லாபம் ஈட்டும் தொழில்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிசயம் திருமலை திருமூர்த்தி வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் பொம்மராஜன், திருப்பூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும், அரசின் உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்தும் பேசினார். பணிநிறைவு பெற்ற இணை வேளாண் இயக்குநரும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆலோசகருமான அரசப்பன், சிறுதானியங்களில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள், அவற்றை சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள், சிறுதானியங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது, சிறுதானியங்கள் மூலம் மனிதகுலத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து பேசினார்.

சமண்ணதி அமைப்பின் இயக்குநர் சுரேஷ்பாபு, உழவர் உற்பத்தி நிறுவனங்களின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் ரம்யாதேவி, வேளாண் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிதி திட்டங்கள் மற்றும் மானிய உதவிகள் குறித்து எடுத்துக் கூறினார்.

வேளாண்மை அறிவியல் மையத்தின்உதவி பேராசிரியர் கலையரசன், விதைச்சான்று அலுவலர் செந்தமிழ்செல்வன் ஆகியோர், வேளாண் வளர்ச்சிக்கான நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் மகுடபதி விவசாய மேம்பாட்டிற்கான மத்திய அரசின் நிதி மற்றும் மானிய உதவிகள் குறித்தும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவர்கள், வேளாண்துறையில் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசினர்.

ஹர்ஷவர்தன் குப்தா, தியானத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும், விவசாய பெருமக்களுக்கு தியானப் பயிற்சி எவ்வாறு உதவுகிறது என்றும் விளக்கி கூறினார். விவசாயிகள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது.  

Tags:    

Similar News