உள்ளூர் செய்திகள்

மூங்கில்பாலம். 

சாலையை கடக்க அணிலுக்கு மூங்கில் பாலம்

Published On 2022-06-26 06:06 GMT   |   Update On 2022-06-26 06:35 GMT
  • உடுமலை மூணாறு செல்லும் சாலையானது சின்னாறு வனவிலங்கு சரணாலயப் பகுதி வழியாக அமைந்துள்ளது.
  • சாலையைக் கடக்கும் வன விலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

உடுமலை:

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்துக்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது . இந்த மலையை வைத்து இரு மாநில எல்லைகள் அமைந்துள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் மூனாறு செல்ல முக்கிய பாதையாக இருப்பது உடுமலை-மறையூர் சாலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு செல்ல தமிழக எல்லையாக உள்ள திருப்பூர் மாவட்டம் சின்னாறு சோதனைச் சாவடியில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 19 கிலோமீட்டர் பயணித்து மறையூரை சென்றடையலாம்.

உடுமலை மூணாறு செல்லும் சாலையானது சின்னாறு வனவிலங்கு சரணாலயப் பகுதி வழியாக அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. யானை,சிறுத்தை,காட்டுமாடு,கரடி மற்றும் இருவாச்சி பறவைகள் குறிப்பிடத் தக்கவையாகும். இதில் சாம்பல் நிற அணில் இப்பகுதியில் மட்டுமே வசிக்க கூடிய ஒன்றாகும். தமிழக கேரள எல்லையில் உள்ள சின்னாறு சரணாலய பகுதியில் மட்டுமே இந்த சாம்பல் நிற அணிலை காண முடியும்.

இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு ஏராளமான வனவிலங்குகள் உயிரிழப்பது தொடர்ந்து வந்தது.இதனை தடுக்கும் வகையில், கேரள வனத்துறை சார்பில் சின்னாறு சோதனைச்சாவடி முதல் மறையூர் வரை உள்ள 19 கிலோமீட்டர் வனப்பகுதி சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிகம் வசிக்கும் சாம்பல் அணில்கள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு அதிக அளவில் இறந்து வந்தது.

இதனை தடுக்கும் வகையில், சாலைக்கு இருபுறங்களில் எதிரெதிராக உள்ள மரங்களில் இரு பகுதிகளில் மூங்கில் பாலங்களை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இதனால் அணில்கள், குரங்குகள் சாலையை கடக்க பாலத்தை பயன் படுத்துவதால் வாகனங்களில் அடிபட்டு இறப்பது வெகுவாக குறைந்துள்ளது என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து உடுமலையைச் சேர்ந்த சிவக்குமார் கூறுகையில், வனப்பகுதிக்குள் வாகனங்கள் செல்லும்பொழுது சாலையைக் கடக்கும் வன விலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன. கிட்டத்தட்ட வருடத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேலாக உயிரிழக்கும் சாம்பல் நிற அணிலை காப்பாற்றும் விதமாக மறையூர் வனப் பகுதியில் இந்த மாதிரியான மூங்கில் பாலங்களை ஆங்காங்கே மரங்களுக்கு இடையே செய்து வைத்துள்ளனர். இதன்மூலம் இப்பொழுது 99 சதவீதம் வரை உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக வனக்காவலர்கள் தெரிவித்தார்கள். இந்த வழியினை குரங்கு உள்ளிட்ட விலங்குகளும் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக கேரள எல்லையான சின்னாறு வனப்பகுதியில் மட்டுமே காணப்படும் சாம்பல் நிற அணிலைக் காக்க கேரள வனத்துறை அமைத்துள்ள இந்த மூங்கில் பாலத்தால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் வன வாழ் விலங்குகளின் இயல்பில் குறுக்கிடும் வகையில் சாலைகளை அமைத்து விட்டு,அவை ஒருபுறமிருந்து மறுபுறம் செல்ல புதிதாக பாலம் அமைப்பது உயிரிழப்பை தடுக்கும் என்றாலும், தன்னியல்பை அவை இழக்கும் அபாயம் உள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News