உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருமூர்த்திமலையில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்

Published On 2022-07-16 06:05 GMT   |   Update On 2022-07-16 06:05 GMT
  • எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
  • மக்கள் அலறியடித்தபடி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

உடுமலை:

உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அணை அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. கடந்த 1972ல் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து இப்பகுதிக்கு அம்மக்கள் இடம் பெயர்ந்தனர்.கடந்த 1984ல் அரசு சார்பில் 120 வீடுகள் கட்டித்தரப்பட்டன.

இந்த குடியிருப்பில் பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல், மலைவாழ் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பில், போதியளவு தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் இரவு குடியிருப்பில் காட்டுப்பன்றிகள் புகுந்துள்ளது. அங்கு, தென்னை ஓலை தடுப்புகளால் அமைந்த வீடுகளில், காட்டுப்பன்றிகள் புகுந்து அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்களை சேதப்படுத்தியுள்ளன.அரிசி மற்றும் இதர உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் இதர பாத்திரங்களை சிறிது தூரம் இழுத்து சென்று வீசியுள்ளன.

இதை பார்த்த மக்கள் அலறியடித்தபடி, வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும் பல மணி நேரம் குடியிருப்பை விட்டு காட்டுப்பன்றிகள் வெளியேறவில்லை. கன்னியம்மாள், சுப்பிரமணி, பழனியம்மாள், கண்ணப்பன் உள்ளிட்டோர் வீடுகளில், அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். பிரச்னைக்கு நிரந்தர தீர்வாககுடியிருப்புகள் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News