உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தண்ணீர் வற்றியதால் பாலாற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Published On 2023-06-25 07:24 GMT   |   Update On 2023-06-25 07:24 GMT
  • திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு
  • கேரளா நோக்கி பாய்ந்து அரபிக்கடலை அடைகிறது.

உடுமலை : 

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு. அர்த்தநாரிபாளையம், கம்பாலபட்டி, மஞ்சநாயக்கனூர், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் வழியாக ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. அதன்பின் அது கேரளா நோக்கி பாய்ந்து அரபிக்கடலை அடைகிறது.

மழை காலங்களில் உருவாகும் காட்டாறுகளில் இருந்து வரும் நீர் பாலாற்றில் பெருக்கெடுக்கும் போது நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அர்த்தநாரிபாளையம், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் குடிநீர் தேவைக்காக பாலாற்றில் 10 வட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகி க்கப்படுகின்றன. இந்த ஆற்றில் நீர் செல்லும் போது சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள விவசாயிகளின் தோட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் இருப்பதுடன் கிணற்றிலும் நீர் ஊற்றெடுத்து வந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இந்நிலையில் பருவமழை துவங்காததால் பாலாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. அதில் கரியா ஞ்செட்டிபாளையம் அருகே பாலாறு வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பாலாற்றில் நீர் வரத்து குறைந்து வறண்டுள்ளது. இதனால் அருகே விளைநிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் சூழல் உள்ளது. கிணறுகளில் நீர் குறைந்து பற்றாக்குறை ஏற்படும். பருவமழை பெய்தால் இந்தாண்டு வறட்சியில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

பாலாற்றில் நீர்மட்டம் சரிந்ததால் ஆற்றில் போடப்பட்ட உருவார பொம்மைகள் வெளியே தெரிகின்றன. ஆற்றின் ஒரு பகுதியில் சிலைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், பாலாறு பல கிராமங்களின் நிலத்தடி நீர் உயர ஆதாரமாக உள்ளது. ஆனால் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் புதர்கள் மண்டியும், கழிவுகளாலும் பாலாறு நீர் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.பாலாற்றை தூர்வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தண்ணீர் இல்லாத சூழலில் அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News