உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சாலையோர வியாபாரிகள் கடன் பெற சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது

Published On 2023-09-22 10:20 GMT   |   Update On 2023-09-22 10:20 GMT
  • நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
  • முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூர் ஏவிபி., சாலை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம், அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம். அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்தவேண்டும்.

கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி.

மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

Similar News