உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்

காங்கயம் அம்மா உணவகத்தில் முறைகேடு செய்த 5 ஊழியர்கள் பணி நீக்கம்

Published On 2022-12-05 03:51 GMT   |   Update On 2022-12-05 04:59 GMT
  • அரசின் உன்னத திட்டமான "அம்மா உணவகம்" சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 10 மகளிர் குழுவைச் சேர்ந்த ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை செய்யப்பட்டது.

காங்கயம் :

காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கேயம் நகராட்சியில் தமிழக அரசின் உன்னத திட்டமான "அம்மா உணவகம்" சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் பணிகளை கடந்த 2 வாரங்களுக்கு முன் நகராட்சி அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

அப்போது, அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மளிகை மற்றும் இதர உணவு பொருட்களில் இருப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் 10 மகளிர் குழுவைச் சேர்ந்த ஊழியர்களிடம் தனித்தனியே விசாரணை செய்யப்பட்டது.

இதில் குழுவின் தலைவி பாப்பாத்தி என்பவர் உணவுப் பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தல் மற்றும் சொந்த உபயோகத்திற்காக உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டு, அவர் மற்றும் அவருக்கு துணையாக செயல்பட்ட 5 ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்தக் குற்றச்செயலில் காங்கேயம் 2-வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வரும் சரவணன் இதற்கு மூளையாக இருந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.

சரவணன் என்பவர் அம்மா உணவகத்தில் தலைவியாக பணியாற்றி வந்த பாப்பாத்தி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இது சம்பந்தமாக சரவணன் மீது காங்கயம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News