ஜல்லி கற்கள் போட்டு 5 ஆண்டு ஆகியும் தார் சாலை அமைக்காத அவலம்
- மாணவர்கள் வேதனை
- சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மதனாஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு எகுறான் வட்டம் முதல் குட்டை பெருமாள் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மண் சாலை இருந்தது. இந்த வழியாக அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் யாரும் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும்,இங்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
ஜல்லி கற்கள் பெயர்ந்து மேலே வந்துள்ளது
இதை கடந்த 2018-2019-ம் ஆண்டு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒரு அடுக்கு ஜல்லி கற்கள் கொட்டி ஜல்லி சாலை போட்டுள்ளனர்.பின்னர் தார் சாலை அமைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
ஜல்லி போட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தார் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து மேலே வந்துள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஜல்லி கற்கள் மட்டுமே போடப்பட்ட அந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்களின் சைக்கிள் மாதம் 5 முறைக்கு மேல் பஞ்சர் ஆகிவிடுகிறது.
சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்தது காயம் ஏற்படுவதாகவும் பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் பலமுறை முதல் அமைச்சர் தனிபிரிவு,மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.