உள்ளூர் செய்திகள்

சாலையில் சுற்றி திரியும் மாடுகளை படத்தில் காணலாம்.

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரியும் மாடுகள்

Published On 2023-06-12 07:20 GMT   |   Update On 2023-06-12 07:20 GMT
  • பாதசாரிகளையும் அச்சுறுத்தி வருவதாக புகார்
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

செங்கம்:

செங்கம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் நகரில் உள்ள 18 வார்டுகளிலும் குறிப்பாக புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மெயின், மில்லத் நகர், போளூர் சாலை, தளவாநாயக்கன்பேட்டை, மேலப்பாளையம், ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்பட போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகிறது.

மேலும் கூட்டமாக மாடுகள் சாலையில் வழிமறித்து நிற்பதால் பல்வேறு நேரங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து பலமுறை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி தெரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வளர்க்காமல் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் விட்டு செல்வதாகவும் இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சாலைகளில் செல்லும் பாதசாரிகளையும் கால்நடைகள் அச்சுறுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் உட்பட கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என செங்கம் பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News