உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை நாளை கூடுகிறது

Published On 2024-10-07 10:23 IST   |   Update On 2024-10-07 11:07:00 IST
  • அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
  • 500 கடைகளை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ந்தேதி மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி நியமனத்தை தொடர்ந்து அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டது.

இந்த மாற்றத்தின் போது அமைச்சரவையில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கா.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டனர். செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அப்போது பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் அனுமதிகள், சலுகைகள் குறித்து விவா தித்து இறுதி முடிவு செய் யப்படும். சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள நிலையில் புதிய நிறுவனங்களின் அனுமதி பற்றி கொள்கை முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 4829 மதுக்கடைகளில் 500 கடைகளை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News