கம்பைநல்லூர் அருகே யானை உயிரிழப்பதற்கு முன்பு எந்த பயிரையும் சேதப்படுத்தாமல் யானை கெலவள்ளியில் விவசாய தோட்டத்தில் உலா வந்த போது எடுத்தபடம்.
வனத்தை விட்டு யானைகள் ஊருக்குள் வருவதை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்
- பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் யானை பயணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக்கொண்டது.
- வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் இருக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து கம்பைநல்லூர் அருகேயுள்ள கெலவள்ளி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக காட்டுயானை சென்றுள்ளது.
அப்பொழுது விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும் போது தாழ்வாக இருந்த மின் கம்பியில் யானை உரசியதால் தலை, காது பகுதிகளில் மின்சாரம் தாக்கியது.
இதில் அப்படியே அந்த ஆண் யானை சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனையடுத்து பின் தொடர்ந்து வந்த பாலக்கோடு மற்றும் மொரப்பூர் வனத்துறையினர் யானை உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து உயிரிழந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.
தருமபுரி மாவட்ட வனஅலுவலர் கார்த்தியாயினி (பொறு) தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யபட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம் செய்யபட்ட இடத்தில் கெலவள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கை போல் துத்தாரி ஊதியும், சாமதளம் அடித்து, மஞ்சள் தூவி, குங்குமிட்டு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருகே ஒரே இடத்தில் மூன்று காட்டு யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்த சோகம் நீங்குவதற்குள் மீண்டும் 25 வயது மதிக்க தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய இந்த ஆண் யானை 17 மணி நேரம் எங்கும் நிற்காமல், உணவு எடுக்காமல் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் பயணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக்கொண்டது.
கடந்த 40 நாட்களாக தனது நண்பனை தேடி வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள் வழியாக ஊர் ஊராக சுற்றி பார்த்தும் தனது நண்பனை பார்க்காமலேயே உயிரிழந்த பரிதாபம் இந்த யானைக்கு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியே வராமல் இருக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.