வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு, மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: தம்பிதுரை எம்.பி. பேச்சு
- அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூர் ஜுஜுவாடியில் நேற்று நடைபெற்றது.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே, பட்டாசு கடை என்ற பெயரில் வெடி மருந்துதான் கடைகளில் வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூர் ஜுஜுவாடியில் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு, வடக்கு பகுதி செயலாளர் அசோகா தலைமை தாங்கினார். ஓசூர் தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன்,மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.
இதில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதி களிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும். அடுத்து தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போல், நாடாளுமன்ற தேர்தலிலும் 40 இடங்களிலும் இரட்டை இலை வெற்றி வாகை சூடும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கனவை, செயலை நனவாக்க இந்த 52 -வது ஆண்டு தொடக்க விழாவில் அனைவரும் உறுதி ஏற்போம்.
தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை கொடி கட்டி படிக்கிறது.கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே, பட்டாசு கடை என்ற பெயரில் வெடி மருந்துதான் கடைகளில் வைக்கப்படும். கிருஷ்ணகிரி, அரியலூர், போன்ற இடங்களில் நடந்த விபத்துகளுக்கு என்ன காரணம்? பட்டாசு என்ற பெயரில் வெடிமருந்துதான். தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்ந்து விட்டது. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத அரசாக, தி.மு.க. அரசு இருந்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை.
இவ்வாறு தம்பிதுரை எம்.பி. பேசினார்.
மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பால கிருஷ்ணரெட்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், முன்னாள் நகர செயலா ளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ்.நாராயணன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாநில, மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.