உள்ளூர் செய்திகள்

மாதவரம் பள்ளியில் ஆசிரியர் தாக்குதல்- 12 சிறுவர்கள் மீட்பு

Published On 2022-12-01 12:14 IST   |   Update On 2022-12-01 12:14:00 IST
  • 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
  • பீகாரில் உள்ள சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

கொளத்தூர்:

மாதவரம் பொன்னியம்மன்மேடு, அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பள்ளி இயங்கி வந்தது. இங்கு தங்கி படிக்கும் சிறுவர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் அவர்கள் அழுதபடி சத்தம் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராமுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து உதவி கமிஷ்னர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் காளிராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 12 சிறுவர்கள் குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் காயம் அடைந்த சிறுவர்களை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் பராமரிப்பாளர் அக்தர் மற்றும் ஆசிரியர் அப்துல்லா ஆகிய இருவரை கைது செய்தனர்.

இதற்கிடையே பள்ளியில் இருந்து 12 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராயபுரத்தில் உள்ள சிறுவர்கள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுபற்றி பீகாரில் உள்ள சிறுவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வந்ததும் பெற்றோரிடம் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். மேலும் வீட்டில் செயல்பட்ட பள்ளி மூடப்பட்டு வீட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News