உள்ளூர் செய்திகள்
சுமதி-கண்ணன்.

கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்றேன்- பெண் கொலையில் கைதான கணவர் வாக்குமூலம்

Published On 2023-02-13 08:57 GMT   |   Update On 2023-02-13 08:57 GMT
  • ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
  • சுமதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு அடிக்கடி சண்டை போடுவார்.

நெல்லை:

ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி நேற்று மாலை சாமி கும்பிட வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தினுள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

நானும், எனது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கு ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுமதி, என்னிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு, அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார்.

ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை என்னுடன் வீட்டில் வைத்து சண்டை போட்டுவிட்டு சுமதி கோவிலுக்கு சென்றாள். அங்கு நானும் சென்று வாக்குவாதம் செய்தேன். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News