உள்ளூர் செய்திகள்

இந்து- இஸ்லாமிய பெண்களை திருமணம் செய்து உயிரிழந்த கணவர் உடல் யாருக்கு? நீதிமன்றத்தை நாடக்கோரி போலீசார் உத்தரவு

Published On 2024-02-19 10:07 GMT   |   Update On 2024-02-19 10:07 GMT
  • கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் என்பவரின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவரான இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினிடம் இரு தரப்பினரும் சென்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சையத்அலி பாத்திமா தரப்பினர் கூறுகையில், ஏற்கனவே சாந்தியை விவகாரத்து செய்து விட்டார். இதனால் நாங்கள் தான் அடக்கம் செய்வோம் என்று கூறினார்.

ஆனால் சாந்தி தரப்பினர் கூறுகையில், விவகாரத்து உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் எங்களிடம் தான் உடலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இப்பிரச்சனையில் காவல் துறையினர் முடிவெடுக்க முடியாமல், உடலை கைப்பற்றி காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துள்ளனர்.

கணவர் உடலை யார் அடக்கம் செய்வது என்று இரண்டு மனைவிகளும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று உடலை பெற்று கொள்ளுமாறு கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை விட பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன், இறந்த பின்னர் சந்தித்த பிரச்சனைகள் தான் அதிகம் என்று இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் முணுமுணுத்தப்படி சென்றனர்.

Tags:    

Similar News