உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் காமராஜ் மகனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2022-07-08 06:08 GMT   |   Update On 2022-07-08 06:08 GMT
  • முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் டாக்டர் ஆவார். இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார்.
  • இதற்காக சிங்காநல்லூர் கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளார்.

கோவை:

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காமராஜ் வீடு உள்பட அவருடன் தொடர்புடைய 49 இடங்களில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருவாரூர், சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் இன்பன் டாக்டர் ஆவார். இவர் கோவையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறார்.

இதற்காக சிங்காநல்லூர் கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளார். அந்த வீட்டில் தங்கியிருந்து அவர் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் இன்பன் வீட்டுக்கு இன்று காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்றனர். ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் மொத்தம் 7 பேர் சென்றனர்.

அப்போது டாக்டர் இன்பன் வீட்டில் இருந்தார். அவரிடம் உங்கள் வீட்டில் சோதனை நடத்தப்போவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அவரும் சோதனைக்கு ஒத்துழைப்பு அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சோதனையில் இறங்கினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில ஆவணங்களை காட்டி அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதற்கும் டாக்டர் இன்பன் விளக்கம் அளித்தார்.

சோதனையை ஒட்டி இன்பன் வீட்டு முன்பு பாதுகாப்பு பணிக்காக உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News