உள்ளூர் செய்திகள்

வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு தீ வைப்பு- பயனாளிகளுக்கு வழங்க இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசம்

Published On 2023-11-08 13:18 IST   |   Update On 2023-11-08 13:18:00 IST
  • அலுவலகத்தில் இருந்த 3 சேர்கள் உள்பட ஏராளமான பொருட்கள் எரிந்தன.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோட்டையூரில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வி.ஏ.ஓ.வாக முருகவேல் என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை அந்த அலுவலகத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ. முருகவேலுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் நத்தம் போலீசாருக்கும் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை பரவ விடாமல் அணைத்தனர். இருந்தபோதும் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வேட்டி, சேலைகள் எரிந்து சேதமாகின. மேலும் அலுவலகத்தில் இருந்த 3 சேர்கள் உள்பட ஏராளமான பொருட்கள் எரிந்தன.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் இருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. எனவே அதன் வழியாக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதே பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தீ வைத்த நபர்கள் யார் என தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News