உள்ளூர் செய்திகள்

கடலூர் மாநகர சாலைகளில் மதுபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2023-10-25 08:13 GMT   |   Update On 2023-10-25 08:13 GMT
  • ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? போன்றவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
  • ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்:

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களில் அதிக நபர்களை ஏற்றி செல்வதாகவும், சரியான முறையில் போக்குவரத்து விதியை கடைப்பிடிக்காமல் சென்று வருவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வந்தன. மேலும், கடலூரில் இருந்து மதுப்பிரியர்களுக்கென பிரத்தியோக ஷேர் ஆட்டோக்கள் ஓட்டப்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கடலூர் நகரப் பகுதியில் இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் போக்குவரத்து போலீசார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் குடிபோதையில் உள்ளனரா? ஷேர் ஆட்டோவில் அதிகளவில் பயணிகளை அதிகளவில் ஏற்றி செல்கிறார்களா? டிரைவர் அருகாமையில் கூடுதல் பயணிகளை அமர வைத்து செல்கின்றனரா? உரிய ஆவணத்துடன் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா? போன்றவைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த 2 டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிகளவில் பயணிகளை ஏற்றி சென்ற 31 ஷேர் ஆட்டோகளுக்கு அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும், கடலூர் நகர பகுதியில் தொடர்ந்து ஷேர் ஆட்டோக்கள் ஆய்வு செய்யப்படுமென போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News