உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 40 இடங்களில் தாமரையை மலர செய்வோம்-நெல்லையில் பரபரப்பு போஸ்டர்கள்

Published On 2023-03-21 17:15 IST   |   Update On 2023-03-21 17:16:00 IST
  • பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறினார்.
  • அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நெல்லை:

தமிழகத்தில் பா.ஜனதா, அ.தி.மு.க. இடையே ஏற்பட்டு வரும் கருத்து மோதல்களால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறினார்.

அதே நேரத்தில் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மூத்த தலைவர்கள் அவரது கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சமாதானபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் சங்கம் என்ற பெயரில் பா.ஜனதா கட்சி கொடி கலரில் வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், எங்கள் நரேந்தி ரரே தனித்து வா... தமிழகத்தில் தாமரையை 40 இடங்களிலும் மலர செய்வோம் என்று வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம், பாராளுமன்ற தேர்தலில் தனித்து நிற்போம் என்று மேலிடத்தை வலியுறுத்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவர் மாநில தலைவர் பதவி நமக்கும் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு எதிரானவர்கள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News