திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற மர்ம நபர்கள்
- செங்கப்படை சாலையில் உண்டியல் ரோட்டோரமாக கிடந்தது.
- போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் போலீஸ் சரகத்தில் உள்ளது பழமையான பராசக்தி காளியம்மன் கோவில். இந்த கோவிலில் 4 அடி உயரமுள்ள 2 உண்டியல்கள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல பூசாரி பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் வந்து கோவிலை திறந்தபோது ஒரு உண்டியல் காணாமல் போயிருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உண்டியலை தேடிப்பார்த்துள்ளனர்.
அப்போது செங்கப்படை சாலையில் உண்டியல் ரோட்டோரமாக கிடந்தது. ஆனால் அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது. அந்த உண்டியலில் சுமார் ரூ. 20 ஆயிரம் காணிக்கை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கோவில் எதிர்ப்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் உண்டியலை தூக்கிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி பால சுப்பிரமணியன் வில்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த துணிகர திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.