மீண்டும் பாடந்தொரையை நோக்கி வரும் மக்னா யானை
- புளியம்பாறை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பி.எம்.2 மக்னா யானை சுற்றி திரிந்தது.
- மக்னா யானை தடுத்து நிறுத்தி அடர்ந்த வனத்திற்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூா், செலுக்காடி, பாடந்தொரை, தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள், புளியம்பாறை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பி.எம்.2 மக்னா யானை சுற்றி திரிந்தது.
இந்த யானை அங்குள்ள வீடுகளை இடித்ததுடன், உணவுப்பொருட்களை தின்று சேதப்படுத்தி வந்தது.
மேலும் தேவாலா மற்றும் புளியம்பாறை கிராமங்களில் 2 பெண்களை தாக்கிக் கொன்றது. இந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து கடந்த 9-ந் தேதி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதியான சீகூா் சரகத்தில் உள்ள காங்கிரஸ் மட்டத்தில் விடப்பட்டது.
அந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.முற்றிலும் மாறுபட்ட தட்ப வெப்ப நிலை கொண்ட சீகூா் வனப் பகுதியில் இருந்து தற்போது, தான் ஏற்கனவே சுற்றிதிரிந்த இருப்பிடத்தை நோக்கி மக்னா யானை நடந்து வரத் தொடங்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாற்றை நேற்றுமுன்திம் யானை கடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மக்னா யானை தடுத்து நிறுத்தி அடர்ந்த வனத்திற்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 9 கும்கி யானைகள் உதவியுடன் 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 2-வது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சில சமயங்களில் விரட்ட முயன்ற போது மக்னா யானை வன ஊழியர்களையும் துரத்தியது. பின்னர் அங்கிருந்து மசினகுடி மாயாறு பகுதிக்கு திரும்பி சென்றது.
இருப்பினும் ரேடியோ காலர் சிக்னல் மூலம் இரவு பகலாக யானை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். தற்போது யானை மாயாறு பகுதியில் சுற்றி திரிகிறது.
இதற்கிடையே இந்த யானை தொரப்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களை விரைவில் வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
யானை பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்த பகுதிக்கே திரும்பி வருவது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.