திருவள்ளூர் அருகே படிக்கட்டில் தொங்கிய மாணவன் மீது பஸ் சக்கரம் ஏறியது- கால் முறிந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- அரண்வாயல் பகுதியில் வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது தவறி முன் மற்றும் பின்பக்க டயருக்கு இடையில் விழுந்தார்.
- பள்ளி நேரத்தில் போதுமான பஸ் இல்லாததே விபத்துக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது 14 வயது மகன் மணவாளநகர் நடேசன் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 18-ந் தேதி மாலையில் பள்ளி முடிந்ததும் அரசு மாநகர பஸ்சில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்தார். அரண்வாயல் பகுதியில் வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியபோது தவறி முன் மற்றும் பின்பக்க டயருக்கு இடையில் விழுந்தார்.
இதில் வலது காலில் பின் சக்கரம் ஏறி இறங்கி அவரது கால் முறிந்தது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சென்னை அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாயார் செண்பகம் கொடுத்த புகாரின பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் பஸ் டிரைவர் கீழ்மணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் போதுமான பஸ் இல்லாததே விபத்துக்கு காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.