உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி 50 சதவீதமாக குறைந்தது

Published On 2022-08-06 10:06 IST   |   Update On 2022-08-06 10:06:00 IST
  • சமீப காலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
  • ஆடி மாதம் தொடங்கியதில் வெள்ளிப் பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகளுக்கு நாடு முழுவதும் தனி மவுசு உண்டு. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

குறிப்பாக இங்கு வெள்ளி கால் கொலுசு, குங்கும சிமிழ், சில்வர் தட்டு, குடம் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த பொருட்கள் வட மாநிலங்களுக்கும் அதிகளவில் அனுப்பப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் சேலத்தில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி இருக்கும்.

சமீப காலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்கியதில் வெள்ளிப் பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் வெள்ளி விலை வேகமாக சரிந்து வருகிறது. இதனால் வெள்ளி தொழில் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் செவ்வாய்ப்பேட்டை வெள்ளி கால்கொலுசு உற்பத்தி கைவினைஞர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது:-

சேலம் வெள்ளிப்பொருட்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை 15-ந்தேதி வரை முகூர்த்தங்கள் இருந்ததால் வெள்ளிப்பொருட்களின் விற்பனை நல்லமுறையில் இருந்தது. வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் விற்பனை அதிகரித்தது. இதனால் வெள்ளிப்பட்டறைகள் வாரத்தில் 6 நாட்களும் சுறுசுறுப்பாக இயங்கியது.

இந்த நிலையில் ஆடிமாதம் தொடங்கியதில் இருந்தே வெள்ளிப்பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. கடந்த ஜூலை முதல் வாரத்தில் ஒருகிலோ வெள்ளி ரூ.65 ஆயிரத்திற்கு விற்றது. ஜூலை மாத இறுதியில் ரூ.60 ஆயிரமாக சரிந்தது. இதனால் மேலும் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பதால் வெள்ளிப்பொருட்களின் விற்பனை வழக்கத்தை விட 50 சதவீதமாக குறைந்துள்ளது.

இதனால் வெள்ளிக்கட்டிகளின் விற்பனையும் குறைந்தது. கடந்த 10 நாளில் கிலோவுக்கு மேலும் ரூ.3 ஆயிரம் சரிந்து, தற்போது ரூ.57 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. வெள்ளிப்பொருட்கள் விற்பனை சரிவால் பட்டறைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படுகிறது. வேலை குறைந்ததால் தொழிலாளர்களும் வருமானமின்றி பாதித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News