ஊத்தங்கரை அருகே பள்ளி, கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்
- இரண்டு வாகனங்களின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
- விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி கிராமம் அருகே இன்று காலை தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எருமியாம்பட்டி கல்லூரி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் இரண்டு வாகனங்களின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயத்துடன் மாணவர்கள் உயிர்தப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தில் சிக்கிய பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.