ஓசூர் அருகே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ரூ.8 லட்சம் கொள்ளை
- நிறுவனத்தில் உள்ளே இருந்த கல்லாபெட்டியை உடைத்த கும்பல் அதற்குள் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை திருடியுள்ளது.
- நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட விலையுயர்ந்த மின்சாதன பொருட்களையும் திருடி கொண்டு கும்பல் தப்பிவிட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அந்திவாடியில் பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டின் துணை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
பிளிப்கார்ட்டில் பதிவு செய்யப்படும் பொருட்கள் இந்த நிறுவனத்திற்கு வரும். பின்னர் இங்கிருந்து தான் வாடிக்கையாளர்களுக்கு அவை வினியோகிக்கப்படும்.
நேற்றிரவு இந்த நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை எந்திரம் மூலம் அறுத்து உள்ளே மர்ம கும்பல் ஒன்று புகுந்துள்ளது.
நிறுவனத்தில் உள்ளே இருந்த கல்லாபெட்டியை உடைத்த அந்த கும்பல் அதற்குள் இருந்த ரூ.8 லட்சம் பணத்தை திருடியுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட விலையுயர்ந்த மின்சாதன பொருட்களையும் திருடி கொண்டு அந்த கும்பல் தப்பிவிட்டது.
இன்று அதிகாலை அந்த நிறுவனத்தை ஊழியர்கள் திறந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போய் இருந்தது. மேலும் பொருட்கள் சிதறி கிடந்தன. நிறுவனத்தின் பின்புறத்தின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கிடந்தது.
இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மோப்பநாய் அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.