உள்ளூர் செய்திகள்

ரவுடியின் கூட்டாளியை கொல்ல பதுங்கியிருந்த 7 பேர் கைது

Published On 2022-08-17 11:54 IST   |   Update On 2022-08-17 11:54:00 IST
  • வெள்ளவாரி வாய்க்கால் பகுதியில் ஒரு கும்பல் பதுங்கியிருந்து சதி திட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல்.
  • ஜான்டியின் கூட்டாளி பிரசாத்தை கொலை செய்ய பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

புதுச்சேரி:

ரவுடியின் கூட்டாளியை கொல்ல பதுங்கியிருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள்-கத்திகளை பறிமுதல் செய்தனர்.

புதுவை சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை ஒரு கும்பல் பதுங்கியிருந்து சதி திட்டத்தில் ஈடுபடுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், புனிதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. ஆனால் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 7 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி, மற்றும் வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். இதனை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சண்முகாபுரம் பாரதிபுரத்தை சேர்ந்த அய்யனார் (26), சண்முகாபுரம் மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்த விஸ்வநாதன்(21), திலாஸ்பேட்டை வீமன் நகரை சேர்ந்த அகிலன் என்ற பொட்டுக்கடலை (27), முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்த சந்துரு என்ற டி.வி.சந்துரு(22), திலாஸ்பேட்டை அய்யனார் கோவிலை சேர்ந்த சசி என்ற சசிகுமார்(20), சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பை சேர்ந்த சதீஷ்(20) மற்றும் கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்தகுமார்(20) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

சண்முகாபுரத்தை சேர்ந்த ரவுடிகளான மார்ட்டின் அவரது சகோதரர் ஏசுராஜ் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இவருக்கு எதிரியான அதே பகுதியை சேர்ந்த ஜான்டியின் கூட்டாளி பிரசாத்தை கொலை செய்ய பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் ஜான்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ட்டினுக்கு நெருக்கமான கோரிமேட்டை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை வெடிகுண்டு வீசி கொலை செய்தார். இதனால் ஜான்டி மீது மார்ட்டின் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேனர் வைத்த தகராறில் மார்ட்டினின் சகோதரர் ஏசுராஜை ஜான்டியின் கூட்டாளிகளான அபினேஷ் மற்றும் பிரசாத் ஆகியோர் தாக்கினர். இதனால் மார்ட்டின் மேலும் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றார். ஜான்டிக்கு வலது கரமாக இருந்து வரும் பிரசாத்தை கொல்ல மார்ட்டின் திட்டமிட்டார். பிரசாத் எப்போதும் வெள்ளவாரி வாய்க்கால் வழியே வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு பிரசாத் வரும்போது தீர்த்துக்கட்ட மார்ட்டினின் கூட்டாளிகள் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கொலை செய்ய தூண்டிய மார்ட்டின் அவரது சகோதரர் ஏசுராஜ் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களில் அகிலன், சந்துரு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி வேல்முருகன் காரை பெட்ரோல் ஊற்றி எரித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

வேல்முருகனின் மகன் சிவபிரியன் ஜான்டியின் கூட்டாளியான பிரசாத்துடன் நெருங்கி பழகி வந்ததால் அவர்கள் காரை எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News