உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு

Update: 2022-09-26 11:11 GMT
  • அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
  • அதே நேரத்தில் இந்த அலுவலகத்தையொட்டி மற்ற அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது.

இந்த கட்டிடத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. பின்னர் மாநகர போலீஸ் அலுவலகம் இயங்கி வந்தது. தற்போது மகளிர் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் வாஞ்சி மணியாச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதைக்கான நில எடுப்பு அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலக அறையின் மேற்கூரை இன்று மதியம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் இந்த அலுவலகத்தையொட்டி மற்ற அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது அறைகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

தகவலறிந்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News