தனியார் பஸ்சில் ரேசன் அரிசி கடத்தல்
- தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை சோதனை செய்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து தும்பேரி வழியாக தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெலத்தி காமணிபெண்டா மலை கிராமம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்படுகிறது.
இந்த பஸ் மூலமாக தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவில் ரேசன் அரிசி கடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் பஸ் மலை கிராமத்திற்கு வாணியம்பாடியில் இருந்து புறப்பட்டு சென்றது.
அப்போது தும்பேரி அருகே மலையடிவாரத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சென்றபோது தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சை சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தன அதனை பறிமுதல் செய்தனர். அப்போது பொதுமக்கள், தினமும் இந்த பஸ் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது.
அதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பஸ் டிரைவர் மற்றும் அரிசி கடத்துபவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் மினி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. பஸ்சில் கடத்தப்பட்ட250 கிலோ ரேசன் அரிசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.