உள்ளூர் செய்திகள்

8-வது நாளாக பேராசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்- விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிப்பு

Published On 2024-02-23 14:55 IST   |   Update On 2024-02-23 14:55:00 IST
  • போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
  • சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதியர் சங்கத்தினர் இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதிவாளரோ, துணைவேந்தரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது சம்பளம் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. இதனால் பேராசிரியர்கள் அலுவலர்கள் ஓய்வூதியர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் சான்றிதழ் வழங்கும் பணிகள் தினசரி வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் மாணவ-மாணவிகள் சான்றிதழ் பெற காலதாமதமாகிறது. இதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பும் தள்ளி போகிறது.

மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும், சான்றிதழ் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் மாணவ-மாணவிகளும் இப்போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News