உள்ளூர் செய்திகள்
கொல்கத்தாவில் மீட்கப்பட்ட இளம்பெண் சுமித்ரா மற்றும் அவரது குழந்தை.

கொல்கத்தாவில் வீட்டில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பெருந்துறை இளம்பெண் குழந்தையுடன் மீட்பு

Published On 2022-11-21 11:17 GMT   |   Update On 2022-11-21 11:17 GMT
  • கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
  • சுமித்ரா தனக்கு குழந்தை பிறந்தது குறித்து பெருந்துறையில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவரது மகள் சுமித்ரா (22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியைச் சேர்ந்த சுப்ரததாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் மகளை காணாத அவர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது சுமித்ரா தனது பெற்றோருக்கு போன் செய்து தான் காதல் திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் வசித்து வருவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து அவர் பெருந்துறையில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுமித்ராவை அவரது கணவர் குடித்து விட்டு வந்து வீட்டில் அடைத்து வைத்து சூடு போட்டு சித்ரவதை செய்வதாகவும், சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுப்பதாகவும், தனது பெற்றோரிடம் வீடியோ காலில் பேசி கதறி அழுதார். மேலும் தன்னையும், குழந்தையும் மீட்க வேண்டும் என்றும் கதறினார்.

இதையடுத்து சுமித்ராவின் பெற்றோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த பெருந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த 17-ந் தேதி கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் சுமித்ராவை தேடினர். அப்போது அவர் இடத்தை கண்டுபிடித்து சுமித்ராவையும், அவரது குழந்தையையும் தனிப்படை போலீசார் மீட்டு மங்கள் கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையில் சுமித்ராவை அவரது கணவர் சுப்ரததாஸ் சித்ரவதை செய்தது உண்மை என தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சுமித்ரா மற்றும் அவரது குழந்தையை மீட்டு பெருந்துறைக்கு புறப்பட்டனர். அவர்கள் பெருந்துறைக்கு வந்ததும் சுமித்ரா மற்றும் அவரது குழந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சுமித்ராவின் கணவரிடம் அம்மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News