உள்ளூர் செய்திகள்

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயிற்சியின்போது கட்டிட தொழிலாளியின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது

Published On 2023-01-20 08:49 GMT   |   Update On 2023-01-20 08:49 GMT
  • திரிசூலம் பகுதியில் கட்டிட பணி நடந்து வருகிறது.
  • துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தாம்பரம்:

திரிசூலம் பகுதியில் கட்டிட பணி நடந்து வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த இனசேர் ஆலாம்(வயது 27) என்பவர் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.

இவர் வழக்கம்போல் கட்டிடத்தின் 2-வது தளத்தில் நின்றபடி வெளிப்புறபூச்சு பணியில் ஈடுபட்டார்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த துப்பாக்கி குண்டு ஒன்று திடிரென இனசேர் ஆலாமின் வலது காலில் பாய்ந்தது. இதில் ரத்தம் வழிந்து அவர் அலறி துடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக இனசேர் ஆலாமை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது காலில் இருந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் உடனடியாக அகற்றினர். தற்போது இனசேர் ஆலாம் நலமாக உள்ளார்.

இது குறித்து பல்லாவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

இதில் மீனம்பாக்கம் அருகே உள்ள குட்ட மலை பகுதியில் தற்போது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது தெரிந்தது. அங்கிருந்து தவறுதலாக பறந்து வந்த துப்பாக்கி குண்டு இனசேர் ஆலாமின் காலில் பாய்ந்து இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, மீனம்பாக்கம் அருகே உள்ள குட்ட மலை பகுதியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து இந்த குண்டு வந்து உள்ளது. சுமார் 300 மீட்டர் தூரத்துக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தால் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கும்.

தற்போது துப்பாக்கி குண்டு பாய்ந்த இடம் பயிற்சி மையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

Tags:    

Similar News