உள்ளூர் செய்திகள்

மலை கிராமங்களுக்கு குதிரையில் எடுத்து செல்லப்பட்ட மின்னணு எந்திரங்கள்

Published On 2024-04-18 08:39 GMT   |   Update On 2024-04-18 08:39 GMT
  • சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர்.
  • வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மலைப்பகுதி கிராமங்களான எல்லைப்பாறை மலை அடிவாரத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் லிங்கவாடி-மலையூர் மலை உச்சியில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பாதை வசதி இல்லாமல் கரடு முரடான கற்கள் நிறைந்த பாதையை கடந்து செல்ல வேண்டும். அதன்படி நாளை நடைபெறும் தேர்தலுக்காக இன்று காலை குதிரைகளில் 2 ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகளும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 3 குதிரைகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இந்த மலையூரில் ஒரே ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. 4 தேர்தல் உதவி அலுவலர்களும், 4 காவல்துறையை சேர்ந்தவர்களும் இதற்காக சென்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர் 237 பேரும், பெண் வாக்காளர்கள் 247 பேரும் மொத்தம் 484 வாக்காளர்களும் உள்ளனர். இதைபோலவே நத்தம் அருகே குட்டுப்பட்டி அருகில் கரந்தமலை மலை உச்சியில் அடிவாரத்திலிருந்து சுமார் 10கி.மீ தொலைவில் பெரிய மலையூர், சின்னமலையூர் மற்றும் வலசு ஆகிய 3 மலை கிராமங்கள் உள்ளது. இங்கு 3 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் பெரிய மலையூரில் ஆண் வாக்காளர்கள் 340 பேர், பெண் வாக்காளர்கள் 320 பேர் என மொத்தம் 660 வாக்காளர்கள் உள்ளனர்.

சின்னமலையூரில் ஆண் வாக்காளர்கள் 116 பேர், பெண் வாக்காளர்கள் 109 பேர் என மொத்தம் 225 வாக்காளர்கள் உள்ளனர். வலசையில் ஆண் வாக்காளர்கள் 181 பேர், பெண் வாக்காளர்கள் 179 பேர் என மொத்தம் 360 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மினி பிக்-அப் வேனில் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மலை கிராமங்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது. இதில் 4 காவல்துறை அதிகாரிகள், தேர்தல் உதவி அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் குழுவினர் 3 வாக்குச்சாவடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த வாக்குப்பெட்டிகள் தாசில்தார் சுகந்தி மேற்பார்வையில் மலைக்கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் டி.எஸ்.பி. உதயகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News