உள்ளூர் செய்திகள்

மேலும் ஒரு போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதியின் பற்கள் பிடுங்கப்பட்டதா?- புதிய புகாரால் பரபரப்பு

Published On 2023-04-12 16:02 IST   |   Update On 2023-04-12 16:02:00 IST
  • அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில போலீசாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
  • அம்பை சரகத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திலும் விசாரணைக்கு சென்ற ஒருவரது பற்கள் பிடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார். அவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து போலீசார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சரவணன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் சில போலீசாரும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட பாப்பாக்குடி போலீஸ் நிலையத்திலும் விசாரணைக்கு சென்ற ஒருவரது பற்கள் பிடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே இந்த புகார் தொடர்பாக போலீசார் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையை வைத்து அவர் மீதும் சித்ரவதை செய்யப்பட்டு பற்கள் பிடுங்கப்பட்டதாக ஆதாரமின்றி புகார் தெரிவிக்கின்றனர் என்றனர்.

Tags:    

Similar News