காயமடைந்த ரமேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காட்சி.
மேல்பாடி அருகே பா.ஜ.க. பிரமுகர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
- மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ரமேஷை தாக்கினர்.
- குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் வள்ளிமலை அடுத்த கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40). சோளிங்கர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க.துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இவர் மேல்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்கும் பணிகளில் பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்களை இரவு நேரங்களில் பாதுகாக்கும் காவலராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் மர்ம நபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ரமேஷிடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ரமேஷை தாக்கினர்.
இதில் நிலை தடுமாறி படுகாயமடைந்த ரமேஷ் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ரமேஷை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மேல்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ரமேஷை தாக்கியவர்கள் பதிவாகியுள்ளார்களா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.