உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மாம்பழங்கள் வரத்து 250 டன்னாக அதிகரிப்பு

Published On 2023-04-28 09:44 GMT   |   Update On 2023-04-28 09:44 GMT
  • கடந்த வாரத்தில் 100 டன் அளவுக்கு மாம்பழங்கள் வரத்து இருந்தது. இப்போது 250 டன்னாக வரத்து அதிகரித்து உள்ளது.
  • மார்கெட்டில் அதிக அளவு மாம்பழங்கள் குவிந்து வருவதால் ஏராளமான சில்லறை வியாபாரிகள் புதிதாக மாம்பழ விற்பனையை தொடங்கி உள்ளனர்.

போரூர்:

மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. கோயம்பேடு பழ மார்கெட்டுக்கு திருவள்ளூர், திருச்சி, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது.

கடந்த வாரத்தில் 100 டன் அளவுக்கு மாம்பழங்கள் வரத்து இருந்தது. இப்போது 250 டன்னாக வரத்து அதிகரித்து உள்ளது.

அதிக சுவை உள்ள இமாம்பசந்த், பங்கனப் பள்ளி, ஜவாரி, மல்கோவா, செந்தூரா, அல்போன்சா உள்ளிட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு அதிக அளவில் குவிந்து வருகின்றன.

மொத்த விற்பனை கடைகளில் இமாம்பசந்த் ஒரு கிலோ ரூ.130-க்கும், பங்கனப்பள்ளி ரூ.60, மல்கோவா ரூ.120, செந்தூரா-ரூ.50, ஜவாரி ரூ.80, அல்போன்சா-ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

மார்கெட்டில் அதிக அளவு மாம்பழங்கள் குவிந்து வருவதால் ஏராளமான சில்லறை வியாபாரிகள் புதிதாக மாம்பழ விற்பனையை தொடங்கி உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலை யோரங்களில் தற்போது புதிதாக பழக்கடைகள், தள்ளு வண்டிகளில் வியாபாரிகள் மாம்பழங்களை அதிகளவில் குவித்து வைத்து விற்பனை செய்து வருவதை காண முடிகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மாம்பழம் மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை தினசரி 150டன் அளவுக்கு வந்து கொண்டிருந்த மாம்பழங்களின் வரத்து தற்போது 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கோடை மழை, காற்று உள்ளிட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மாம்பழங்கள் அதிகளவில் சேதமடைந்து வீணாகி விட்டது.

இதனால் கடந்த ஆண்டைவிட இப்போது மாம்பழங்களின் உற்பத்தி குறைவாகவே உள்ளது. கடந்த சில நாட்களாக மந்தமாக இருந்து வந்த மாம்பழம் விற்பனை தற்போது சூடு பிடித்து உள்ளது.

இனி வரும் நாட்களில் மாம்பழம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் சிலர் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வருவதால் மக்களிடையே தவறான தகவல் பரவி வருகிறது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News