உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் பள்ளிக்கு சைக்கிளில் சென்ற போது லாரி மோதி பிளஸ்-1 மாணவர் பலி

Published On 2022-07-11 06:32 GMT   |   Update On 2022-07-11 06:32 GMT
  • காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம்.
  • போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது மகன் லட்சுமிபதி (வயது 16). மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இன்று காலை லட்சுமிபதி வழக்கம்போல் பள்ளிக்கு தனது சைக்கிளில் முடிச்சூர் சாலை- மதுரவாயல் சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, கடந்த வாரத்தில் இதே பகுதியில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது 2-வது விபத்து நடந்து உள்ளது. காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் அதிக அளவில் லாரிகள் இச்சாலையில் அனுமதிப்பதே விபத்துக்கு காரணம். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை என்று குற்றம் சாட்டினர்.

விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவன் லட்சுமிபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News