உள்ளூர் செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு செப்டம்பர் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2023-07-28 06:27 GMT   |   Update On 2023-07-28 06:27 GMT
  • விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகி இருந்தார்.
  • வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கோர்ட்டில் எந்தவித இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.

இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை, கொலை சம்பவம் அரங்கேறியது.

இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே சி.பி.சி. ஐ.டி போலீசார் கொடநாடு பங்காளவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள், ஜெயலலிதா, சசிகலாவின் அறைகள் மற்றும் ஸ்டோர் ரூம் ஆகியவற்றின் சில பொருட்கள் என 9 பொருட்களை ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் சி.பி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் கோர்ட்டில் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட 8 செல்போன்களையும் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் கேட்டிருந்தனர்.

இன்று காலை கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகேவல் ஆஜராகி இருந்தார். அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி தனது வாதங்களை முன் வைத்தார்.

வாதங்கள் அனைத்தும் முடிந்த பின்னர், நீதிபதி ஸ்ரீதரன் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இன்று நடந்த விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டுமே ஆஜராகி இருந்தார்.

சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாங்கள் இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இன்று நடைபெறும் விசாரணையானது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் கோர்ட்டில் எந்தவித இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை. மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் விடுமுறை என்பதால் இன்றைய வழக்கை குடும்ப நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் விசாரித்தார்.

Tags:    

Similar News