உள்ளூர் செய்திகள்

காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் நர்சுகளிடம் ரகளை- 3 வாலிபர்கள் கைது

Published On 2023-10-29 10:39 IST   |   Update On 2023-10-29 10:39:00 IST
  • 3 நபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
  • 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் ரோடு பகுதியில் வசிப்பவர் அரவிந்த் சிங். இவரது மனைவி விசாலாட்சி (வயது 46) காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரி பணியில் இருந்துள்ளார்.

அப்போது தலையில் காயமடைந்த நிலையில் ஒரு வாலிபரும், அவருக்கு துணையாக மேலும் 2 வாலிபர்களும் அங்கு வந்துள்ளனர். 3 பேரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. திடீரென அந்த நபர்கள் ஆஸ்பத்திரி அறையில் இருந்த பேண்டேஜ் துணியை எடுத்து தலையில் கட்டு போட்டுக்கொண்டு அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த நர்சுகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது நர்ஸ் விசாலாட்சி அவர்களுக்கு அறிவுரையை சொல்லி அமைதிப்படுத்தியுள்ளார்.பின்னர் மற்றொரு நர்ஸ் வனச்செல்வியுடன் சேர்ந்து, அடிபட்டவரின் தலையில் தையல் போட்டுள்ளார். ஆனால் இதன் பிறகும் அந்த போதை நபர்கள் அவதூறாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயலும்போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் உங்களை எல்லாம் வீடியோ எடுத்து சி.எம். செல்லுக்கு அனுப்பி வேலையை காலி செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த ரகளை சத்தத்தால் அங்கு கூட்டம் கூடியது. உடனே அந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து நர்ஸ் விசாலாட்சி ஆறுமுகநேரி போலீஸ்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப் பதிவு செய்தார். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது காயல் பட்டினம் அரசு மருத்துவ மனையில் ரகளை செய்தவர்கள் ஆறுமுகநேரி கீழநவ்வலடிவிளையைச் சேர்ந்த முருகேசன் மகன் நரேஷ் (34), காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜன் மகன் பிரதாப் சிங் (27), பெருமாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த மந்திர மூர்த்தி மகன் மகேஷ்மூர்த்தி (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இந்த 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News