உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே நகை கடை, பாத்திரக்கடையில் தீ விபத்து

Published On 2024-03-25 08:31 GMT   |   Update On 2024-03-25 08:31 GMT
  • பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
  • மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பேராவூரணி சாலையில் பாத்திர கடை, நகை மற்றும் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பலதரப்பட்ட கடைகள் இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.

இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு அனைவரும் சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை கடையில் இருந்து புகை வெளியேறியுள்ளது. சற்று நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ அருகில் இருந்த பாத்திரக் கடை மற்றும் அக்கடையில் குடோனில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு ஆகியவற்றின் மீது பரவி எரிய தொடங்கியது.

இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க அருகில் இருந்த கட்டிடங்களிலும் தண்ணீரை பீச்சியடித்தனர்.

இந்த விபத்தில் நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News